தமிழ்நாட்டில் உள்ள துப்பாக்கிச்சுடும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு சிறுவனின் உயிரை பறித்ததைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒருமாதம் கூட முடிவடையாத நிலையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயி வீட்டை துப்பாக்கி குண்டுகள் துளைத்ததாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே, முதலமைச்சர் இந்தப் பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி துப்பாக்கிச்சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆய்வின் அடிப்படையில் தேவையான அனுமதியை வழங்கவும், ஆய்வின் முடிவு வேறு மாதிரியாக இருக்கும் பட்சத்தில், துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.