அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ''அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, முறையாக தேர்தல் நடைமுறைகளை கையாளாமல் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டதே விதிமீறல் என்பதால், அதன்மூலம் தேர்வான ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தேர்வு செல்லாது என்று அறிவித்து, கட்சி விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஜூன் 23ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அக்கூட்டத்தை நடத்த ஒ.பி எஸ்., இ.பி.எஸ். ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டுமென புதிதாக கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள இந்த கூடுதல் மனுவில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் பொருளாளர் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட முன்னாள் செயலாளர் என்றும் எதிர்மனுதாரர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: ”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்