”விடியாத அரசாக இருக்கிறது திமுக அரசு" - ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைவர்கள்

”விடியாத அரசாக இருக்கிறது திமுக அரசு" - ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைவர்கள்
”விடியாத அரசாக இருக்கிறது திமுக அரசு" - ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைவர்கள்
Published on

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியும் அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திலும் பங்கேற்றுள்ளனர். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக கடுகு , சீரகம் , உளுந்தம் பருப்பு , கொண்டைக் கடலை, பொட்டுக் கடலை, வெந்தயம், உப்பு, மிளகாய், சேமியா பாக்கெட்டுகள் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றையும் வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், கோவைக்காய் , பச்சை மிளகாய் கோர்க்கப்பட்ட மற்றுமொரு மாலையையும் கழுத்தில் அணிந்துகொண்டு திமுக அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது, திமுக அரசை விமர்சிக்கும் வகையில் பாடலை பாடினார் ஜெயக்குமார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் நீட் காரணமாக 5 மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள். மேலும் தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

கோவையில் 10-ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக அரசு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை தரவில்லை. இவை மட்டுமல்ல... மழை நின்ற பிறகும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததால் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியிலேயே தண்ணீர் இடுப்பளவு தேங்கியது, இது தான் இந்த ஆட்சிக்கான சான்று.

பொய் வழக்கு மூலம் அதிமுகவை, திமுக அழிக்க நினைப்பது பகல் கனவு. கருணாநிதி காலத்திலும் இதுபோல்தான் செய்தார்கள். எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என கருத்துரிமையை புறக்கணிக்கிறது திமுக அரசு. திமுகவை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. இப்போது நடப்பது குடும்ப ஆட்சி. ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும், நிழல் முதல்வர் உதயநிதி மற்றும் சபரீசன்தான். உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என திமுகவில் சிலர் கூறுகின்றனர், எதுவும் நடக்கலாம். ஆனால் உதயநிதி அமைச்சரானாலும் தமிழகத்திற்கு நல்லது நடக்காது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசுகையில், ‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும் ’ உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். மேலும் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதை வலியுறுத்தி, “பழைய ஓய்வூதிய முறை என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று? ரேஷன் கடைகளில் அரிசி தரமற்று இருப்பது ஏன்?” போன்ற கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

தொடர்ந்து “பெட்ரோலுக்கான வரியை அனைத்து மாநில அரசுகளும் குறைத்துள்ளன. ஆனால் குரைக்காத ஒரே அரசு திமுக அரசு. ‘ஸ்டாலின் வரப்போறாரு விடியல் தரப் போகிறார்’ என்றார்கள். விடியல் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விடியாத அரசாக இருக்கிறது திமுக அரசு. மாணவச் செல்வங்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தார்கள். வங்கிகளில் நகைக் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இன்னும் அது திமுக அரசால் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பழைய ஓய்வு ஊதியம் என்ன ஆயிற்று. அதுவும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் அது வழங்கப்படவில்லை” என்றார்.

சேலம் ஆர்ப்பாட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களாகிறது. தேர்தல் வாக்குறுதிகளாக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு சம்பிரதாயத்திற்காக, ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மக்களின் பிரதான தேர்தல் அறிக்கையாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, ‘விடியும் அரசு’ எனக் கோரி தமிழக மக்களை வஞ்சித்து விடியாத அரசாக செயல்பட்டு வருகிறது. வாக்குகளை வாங்குவதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை அளித்து விட்டு ஏமாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்தபடி ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும்; சோதனை என்ற பெயரில் காவல்துறை மூலம் பொய் வழக்குப் போட்டு அவதூறு பரப்பி வரும் திமுகவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com