ஜைன மதத்தினரின் புனித ஸ்தலங்களைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சமூகத்தினர் இன்று (ஜனவரி 6) தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தின் பரஸ்நாத் மலைகளில் மீது அமைந்துள்ளது, சமத் ஷிகர்ஜி. இது, ஜைன மக்களின் மிகப்பெரிய புனித ஸ்தலமாகும். இந்த பரஸ்நாத் மலைப் பிரதேசத்தை, சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில், அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல், குஜராத் மாநிலம் பாலிதானாவில் உள்ள ஜைன மதக் கோயில் அருகே, அம்மாநில அரசு குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் , மது மற்றும் மாமிசங்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.
நாடு முழுவதும் போராட்டம்
ஜைன மதத்தினரின் புனித ஸ்தலம், மடங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறி அதற்கு எதிராகவும், ஜார்க்கண்ட்டின் சமத் ஷிகர்ஜி புனித ஸ்தலத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்ற முயலும் அரசுக்கு எதிராகவும் ஜைன மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி 1ஆம் தொடங்கிய இந்தப் போராட்டம், குஜராத் மற்றும் மும்பையிலும் வெடித்தது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமும் அவர்கள் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். மேலும், இது சம்பந்தமாக குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்
வட இந்தியாவில் மட்டும் போராட்டம் நடத்திய ஜைன மதத்தினர், இன்று (ஜனவரி 6) தமிழ்நாடு முழ்வதிலும் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், சென்னையில் இன்று ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். சென்னை சிந்தாதிரிபேட்டையில் துவங்கிய இந்த பேரணியில் ஜைன மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழ் சமணர்களும் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுற்றுலா மையங்களாக மாற்றும் மாநில அரசுகளின் முடிவை கைவிடக் கோரி அம்மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னையைத் தாண்டி..
திருச்சி:
திருச்சியிலும் இன்று ஜைன மதத்தினர் மவுன ஊர்வலம் நடத்தினர். திருச்சி காந்தி சந்தையில் இருந்து பெரிய கடைவீதி, மேலரண் சாலை, சிங்காரத்தோப்பு வழியாக ஜெயின் கோயில் வரை மவுன ஊர்வலம் சென்றனர். அந்த ஊர்வலத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 500 சமணர்கள் பங்கேற்றனர்.
உதகை
உதகையில், ஜைன மதத்தினர் இன்று முழு கடையடைப்பு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகை சரவணாஸ் சதுக்கத்தில் இருந்து துவங்கிய பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்துகொண்ட ஜைன மதத்தினர், தங்களுடைய பழம் பெருமை வாய்ந்த கோயில்களை சுற்றுலாத்தலமாக மாற்றும் ஜார்கண்ட் மற்றும் குஜராத் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
காஞ்சி:
காஞ்சிபுரத்திலும் ஜைன சமூகத்தினர் கடை அடைப்பு போராட்டம்.நடத்தினர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கம்மாளர் தெரு, நெல்லுக்கார தெரு, எண்ணக்கார தெரு, சேக்குப்பேட்டை, காந்தி சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குஜராத் மற்றும் ஜார்கண்ட் அரசுகளைக் கண்டித்து ஜெயின் சமூகத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஜார்கண்ட் மாநில அரசை கண்டித்து ஜைன மதத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஜைன மதத்தினர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாடு முழுவதும் ஜைன மதத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ,செம்பனார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஜெயின் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் மனு அளித்தனர். பேரணியில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பிவாறு பங்கேற்றனர்.
- ஜெ.பிரகாஷ்