தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இரண்டு மணி நேரமாக நடைபெற்று வருகிறது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 9:30 மணியிலிருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் அதற்குமுன் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், சென்னை காவல் ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிமுக கோரியது. அதன்பேரில் ஏற்கனவே திட்டமிட்டபடி காலை ஒன்பது முப்பது மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக ஆலோசனை நடத்திவரும் நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வெளியே போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார்? எதிர்க் கட்சி துணைத் தலைவர் யார் அதிமுகவின் கொறடா யார் ? என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.