ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து தூத்துக்குடியில் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது.
2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கலவரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அதே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையானது மூடப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் சிகிச்சைக்காக ஆக்ஸிஜனை இலவசமாக உற்பத்தி செய்து தருவதாகக்கூறி ஆலை நிர்வாகம், மீண்டும் அதனைத் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக்கணிப்பு கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆலை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மேலும், தாங்கள் பேசுவது வெளியே தெரிய ஊடகத்தை அனுமதிக்கவேண்டும் என்று மக்கள் அங்கு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச நபர்களைக் கொண்டே தற்போது கூட்டம் நடைபெற்று வருகிறது.