மக்களவையில் அதிமுகவின் எம்பியான ஓபி.ரவிந்தரநாத் குமார் பதவியேற்ற போது பாஜக எம்பிக்கள் அவருக்கு கைதட்டி வரவேற்றனர்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர்.
இந்நிலையில் இன்று மக்களவையில் தமிழ்நாட்டு எம்பிக்கள் பதவியேற்றனர். இதில் தமிழ்நாடு எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர். அப்போது தமிழ்நாடு எம்பிக்கள் தங்களின் பதவியேற்பு உரையின் இறுதியில் ‘வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு என்று முழக்கமிட்டனர். இவர்களில் குறிப்பாக தேனி தொகுதி எம்பியான ஓபி ரவிந்தரநாத் குமார் பதவியேற்றார். அப்போது அவர் பதவி பிரமாணத்தின் இறுதியில், “வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” எனக் கூறினார். அப்போது இவருக்கு பாஜக எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து கைதட்டி வாழ்த்தினர்.