சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு: ஊட்டி, குன்னூரில் போக்குவரத்து மாற்றம்!

கோடைகால சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர பகுதியில் வாகன நெருக்கடியை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஊட்டி சாலை
ஊட்டி சாலைஇரா.சரவணபாபு
Published on

கோடை வெயிலின் தாக்கத்தாலும், பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையினை முன்னிட்டும் குளுகுளு பிரதேசமான ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நீலகிரி மலையடிவார பகுதியான மேட்டுப்பாளையத்தின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தால் இன்று (ஏப்.18) முதல் இருமாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மாற்றாக பாரத் பவன் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, சிவம் தியேட்டர் சாலை, சக்கரவர்த்தி ஜங்ஷன் வழியாக ஊட்டிக்கு செல்லவேண்டும். ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் சுற்றுலா வாகனங்கள் ராமசாமி நகர், பாலப்பட்டி, வேடர் காலனி, சிறுமுகை சாலை, ஆலங்கொம்பு ஜங்ஷன், தென் திருப்பதி நால்ரோடு வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊட்டி சாலை
ஊட்டி சாலைஇரா.சரவணபாபு

அதேபோல் நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் சந்தை கடை, மோத்தே பாளையம், சிறுமுகை சாலை, ஆலங்கொம்பு, தென்திருப்பதி நால்ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும் எனவும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சிறுமுகை இடையே ஒருவழி பாதை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், சத்தியமங்கலம், பண்ணாரி, ஈரோட்டில் இருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலாங்கொம்பு - தென் திருப்பதி நால்ரோடு அன்னூர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் நகருக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் நகர போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் தேவையான அளவிற்கு காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com