சென்னையில் 30 சதவீத நாய்களுக்கு மட்டுமே ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரேபிஸ் நோய் தொடர்பாக பொதுமக்களிடம் உள்ள விழிப்புணர்வு குறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் 8 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு ஒன்றை நடத்தினர்.
இதில் 15 மண்டலங்களில் 84 வீட்டு வளர்ப்பு நாய்கள், 139 தெரு நாய்கள் என மொத்தம் 223 நாய்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 67 நாய்களுக்கு மட்டுமே முழுமையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதும், 44 நாய்களுக்கு காலம் கடந்து செலுத்தப்பட்டு இருப்பதும், 114 நாய்களுக்கு தடுப்பூசியே செலுத்தாமல் இருப்பது தெரிவந்துள்ளது. இதன்படி 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு முறையாக தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் 90 சதவிகித நபர்களுக்கு ரேபிஸ் வைரஸ் குறித்த விழிப்புணர்வு இருப்பதாகவும், நாய் கடியால் பாதிக்கப்பட்டால் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதில் பொதுமக்களுக்கு தயக்கம் நிலவுவதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னையில் நாய் கடி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், அனைத்து நாய்களுக்கும் முழுமையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று தெரியவந்துள்ளது.