ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு தடையில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளால் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை காண நேரிடும் எனவும் இதனை தடுக்க உரிய விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதின்றத்தில் வழக்குத் தொடப்பட்டது.
விசாரணையின் போது மத்திய அரசுத் தரப்பில், டிஜிட்டல் கல்வி நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. ஆன்லைன் வகுப்புக்களுக்கான விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. அதில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.