தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் அமைந்துள்ள எண்ணெய் கிணற்றில் வழக்கமான பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக ஓன்என்ஜிசி விளக்கமளித்துள்ளது. புரளிகள் மற்றும் தவறான பிரச்சாரங்களை நம்பவேண்டாம் என தமிழ்நாட்டு மக்களை அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவன தொடர்புப் பொறுப்பாளர் ஏ.பி ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கதிராமங்கலத்தில் 2000-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் எண்ணெய் கிணற்றில் குறிப்பிட்ட இடைவெளியில் உப்புக்கரைசலை பயன்படுத்தி செய்யப்படவேண்டிய பராமரிப்புப் பணி கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டு 6-ம் தேதி வரை செயல்படுத்தப்பட்டது.
இந்த பராமரிப்பு பணியின் காரணமாக குடிநீருக்கோ, நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பராமரிப்பு பணிகள் முடிந்து உற்பத்தி மறுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வைத் தவிர வேறுவிதமான பாதிப்பைத் தரும் செயல்பாடுகளோ, திட்டங்களோ, மீத்தேன் திட்டமோ, ஷேல்கேஸ் திட்டமோ தமிழ்நாடு முழுமைக்கும் ஓஎன்ஜிசியால் செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படும் குறும்படங்களும், செய்திகளும் அடிப்படை ஆதாரமற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது. புரளிகள் மற்றும் தவறான பிரச்சாரங்களை நம்பவேண்டாம் எனவும் அந்த செய்திக்குறிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன் கேஸ் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஓஎன்ஜிசி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.