திண்டிவனம் அருகே காதலை ஏற்க மறுத்த மாணவியை, கத்தியால் குத்த முயன்ற இளைஞரை கல்லூரி மாணவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவியை, நீர்பெருந்தகரம் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் சந்தோஷ் குமார்(25) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சந்தோஷ் குமார் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவன். தற்போது ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.
சந்தோஷ்குமாரின் காதலை அந்த மாணவி தொடர்ச்சியாக ஏற்க மறுத்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பிய சந்தோஷ் குமார், அந்த மாணவியை கல்லூரி அருகில் சந்திக்க முயன்றபோது அவருடன் இருந்த சகதோழிகள் அவரை திட்டி அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார், நேற்று மதிய உணவு இடைவேளையின்போது, அந்த மாணவியின் வகுப்பறைக்கு கத்தியுடன் சென்று மாணவியை கத்தியால் குத்த முயன்றார். அப்போது அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கிருந்த சக மாணவர்கள் மூவர் சந்தோஷ் குமாரை தடுத்து நிறுத்தினர். அதில் அருள்பாண்டியனுக்கு என்ற மாணவனுக்கு மட்டும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சக மாணவர்கள், சந்தோஷ் குமாரை பிடித்து ஒலக்கூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து, கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக் காதலால் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை வெட்ட முயன்ற சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.