சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சாப்ட்வேர் என்ஜினீயரான சுவாதி கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூன் 24), வழக்கம் போல, தான் பணியாற்றும் நிறுவனத்துக்கு வேலைக்குப் புறப்பட்டார். காலை நேரத்தில் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்த சுவாதி, சிறிது நேரத்தில் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுவாதியை ஒருதலைக் காதலால் வெட்டிக்கொன்றதாக ராம்குமார் என்பவரை போலீஸ் கைது செய்தது. புழல் சிறை அடைக்கப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். அத்தோடு இந்த வழக்கையும் முடித்து வைத்துவிட்டது போலீஸ். சுவாதி கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டது. ஆனால், அதற்கான பணிகள் மட்டும் அண்மையில் தொடங்கப்பட்டது. சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்தும் இன்னும் சிசிடிவி பொருத்தப்படாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.