சென்னையை சேர்ந்த இந்திரகுமார் வீட்டிலேயே இயற்கை முறையில் சுத்தமான குடிநீரை எவ்வாறு பெறலாம் என்பதை செய்துகாட்டி முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வருபவர் இந்திரகுமார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தன் வீட்டு மாடியில் விழும் மழை நீரை கிணற்றில் விழ செய்து, அதனை சேமித்து வைத்து இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்து வருகிறார். தனது வீட்டிற்கு தேவையான அனைத்திற்கும் இந்த நீரையே பயன்படுத்தி வருகிறார்.
மழைநீரை கிணற்றில் சேகரித்து வைத்துள்ள இந்திர குமார், தேற்றான் கொட்டையை தேய்த்து, சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கல், மண் ஓடுகளை பயன்படுத்தி அதனை 50 லிட்டர் தண்ணீரில் போட்டுவிட்டால் 6 லிருந்து 8 மணி நேரத்தில் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தயாராகிவிடும் என்கிறார். மேலும் பயன்படுத்தப்படும் எவ்வித நீரையும் வீணாக்காமல் அதனை நிலத்தடியிலும், செடி, கொடிகளுக்குமே பயன்படும்படி செய்துள்ளார்.
இவ்வாறு வீட்டில் மழைநீர் உட்பட அன்றாடம் பயன்படும் நீரை சுழற்சி முறையில் சுத்திகரித்து பயன்படுத்தி நிலத்தடி நீரையும் பெருக்கி வருகிறார். விரைவில் தமிழகம் கோடை காலத்தை சந்திக்க இருக்கிறது. இவரைப் போல் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டால் பலரும் தண்ணீர் பிரச்னையை தாராளமாக தவிடுபொடியாக்கலாம்.