தமிழகத்தில் “ஒரே நாடு-ஒரே ரேசன்” திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தால் என்னென்ன பயன்கள் என்று பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “ அனைவருக்கும் நியாயவிலை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அப்பகுதியில் இருக்கக்கூடிய ரேசன் கடைகளில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்போரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். யாருக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் ரேசன் பொருட்கள் கையிருப்பு வைத்திருக்க கூடுதலாக 5 சதவீத பொருட்கள் வழங்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார். ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறிய அவர், அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.