கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டு காவல்துறையிடம் சிக்கினார்.
கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து கோவை பந்தய சாலை காவல்நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார், ரவுடி பார்த்தசாரதியை கைதுசெய்ய முற்பட்டனர்.
அப்போது காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார். அப்போது காவல்துறையினரும் அவரை விரட்டி சென்ற நிலையில் ரத்தினபுரி அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எழுந்து நிற்க முடியாமல் இருந்த ரவுடி பார்த்தசாரதியை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.