மதுரையில் நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் இறந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மதுரை - செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் பிரமாண்ட பறக்கும் பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 2 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளிவந்திருந்தது. இதைத்தொடர்ந்து மீட்புப் படையினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
மேம்பாலத்தின் ஒவ்வொரு பிரிவும் 70 டன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீட்பு பணியின்போது, ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 42 வயதான அவர் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், இவரின் பெயர் ஆகாஷ் சிங் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் கட்டப்படுவதன்மூலம், சென்னை - மதுரை பயண நேரம் ஒன்றரை மணி நேரம் குறையும் என சொல்லப்பட்டது. பாலப் பணிகள் முடிந்து திறக்கப்பட்டால் 22 கி.மீ. தூரம் குறையும். இப்பாலம் போலவே அப்பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்திலும் மேம்பாலம் கட்டப்படுகிறது.