80, 90களில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்தது, சைக்கிள் ரிக்ஷா. இப்போது மிகச் சில இடங்களில்தான் பார்க்க முடியும். அந்த வகையில், பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையோரமாக வசித்துக்கொண்டு சைக்கிள் ரிக்ஷா ஒட்டி, அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார் அர்ஜுனன்.
சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட கை ரிக்ஷாக்கள் தொடக்கத்தில் இயங்கி கொண்டு இருந்ன. ஒருவரை கை ரிக்ஷாவில் அமர வைத்து, அதை ஒரு நபர் நபர் இழத்து செல்லும் காட்சி காண்போரைக் கலங்கவைத்துவிடும். இந்த நிலையை மாற்ற, அப்போதைய தமிழகத்தின் முதல்வர் மு.கருணாநிதி ஜூன் 3,1973 அன்று கை ரிக்ஷாவை ஒழித்து, அனைவருக்கும் அதற்கான இழப்பீடும் வழங்கி, புதிதாக சைக்கிள் ரிக்ஷாவை வழங்கினார். அதனைக் கொண்டு பல குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவரை சந்தித்தேன். அவர் சைக்கிள் ரிக்ஷா ஒட்டும் அர்ஜுனன் (70 வயது).
தன்னைப் பற்றியும், தனது குடும்பம் பற்றியும் பகிர்ந்த அர்ஜுனன், "என் மனைவி பெயர் மேரி (50 வயது). எங்களுக்கு விக்கின்னு மகன்(வயது 29) இருக்றான். மனைவி வீட்டு வேலை செய்றாங்க. மகன் ஆட்டோ ஓட்டுறான். எங்களுக்கு வர்ற வருமானத்தை வெச்சு ரோட்டோரமா தங்கி குடும்பம் நடத்துறோம். மழை, வெயில் வெள்ளம், புயல் எது வந்தாலும் எங்களுக்கு இதான் கதி. இல்லைன்னா இங்க இருக்கும் கடைங்க ஒரமா தங்கிக்குவோம்.
35 வருஷத்துக்கு மேல ரிக்ஷா ஒட்டுகிறேன். இப்பல்லாம் ஒருநாளைக்கு 60 ரூபாய்ல இருந்து 100 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இதுக்கு முன்னாடி சொந்தமா சைக்கிள் ரிக்ஷா வெச்சிருந்தேன். அது பழுதாகிடுச்சி. அப்புறம், நாள் வாடகைக்கு எடுத்து சைக்கிள் ரிக்ஷா ஓட்டுறேன். ஒருநாள் வாட மட்டும் 50 ரூபாய். அதுல வர்ற வருமானத்தை வெச்சுதான் அம்மா உணவகத்துல சாப்பிடுறேன்" என்றார்.
"சவாரி சரியா வரலைன்னா?" என்று நான் இழுத்தபோது, "கடவுள் இருக்கான். கண்டிப்பா கிடைக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.
ஒவ்வொரு நாளும் 70 வயதிலும் அர்ஜுனன் சவாரி ஏற்றுவதற்காக சென்னை நம்பர் 1 பிராட்வே பேருந்து நிலையத்தைச் சுற்றி சுற்றி வருகிறார்.
பதிவு செய்யப்பட்ட சைக்கிள் ரிக்ஷா ஒட்டுநர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா கிடைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் அர்ஜுனன்.
- ஆனந்தன்