தமிழகத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர், பாண்டி பஜாரில் மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் 100% செம்மையாக நடைபெற்று வருகிறது. அதனால் தான் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு வீடு தேடு சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கும் 14நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒரே தேசம், ஒரே அட்டை என்ற திட்டம் செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பயோமெட்ரிக் முறை நடைமுறைபடுத்தப்படும். குடும்ப அட்டைக்காக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 71ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.