தமிழகத்தை பொறுத்தவரை தங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தி கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார்.
மேலும், “ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக” எனவும் கூறினார். இந்தக் கருத்து தேசிய அரசியல் தளத்தில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வழிவகுத்தது. விவாதங்களுக்கு பதிலளித்த ஸ்டாலின் ‘ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு’ என்று யாரும் சொல்லவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை தங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வு முக்கியமான தருணம் என்று தெரிவித்தார்.
திமுக தலைமையிலான மக்களவைத் தேர்தல் கூட்டணியில் புதுச்சேரியில் ஒரு தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் என காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.