எழுத்தாளார், திரைப்பட இயக்குனர் S.T.புவி, சென்னை உருவானது எப்படி என்றும், சென்னையின் பெயர்க்காரணம் என்ன என்றும் நம்மிடையே பேசினார்.
“ஆகஸ்ட் 22 சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. ஏன் தெரியுமா? இந்த நாளில் தான் கடற்கரைப்பகுதியான சென்னையை தேர்ந்தெடுத்து ஆங்கிலேயர்கள் தங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தினர். இவர்கள் முதலில் இங்கு வந்த நாளைதான் சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம்.
அப்படி என்றால் முதன் முதலில் ஆங்கிலேயர்கள்தான் சென்னையை வணிக நகரமாக அறிமுகப்படுத்தினரா என்று கேட்டீர்கள் என்றால் அதுதான் இல்லை. இவர்கள் இப்பகுதிக்கு வருவதற்கு முன்பாகவே இங்கு மக்கள் வணிக தொடர்புகளுடனெல்லாம் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் குரும்பர்கள் என்ற இனத்தவர்கள் பகுதி பகுதி இடங்களாக புழல், எழும்பூர், ஈக்காட்டுதாங்கல் போன்ற கிராமங்களை கொண்ட இடங்களில் வாழ்ந்து வந்துள்ளார்கள். அன்றைய காலகட்டத்தில் இருந்தே இவ்விடங்கள் இன்றுள்ள பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இன்றுள்ள பழம்பெரும் கோவிலான சென்னை கேசவபெருமாள் கோவிலும், சென்னை மல்லீஸ்வரர் ஆலயமும் அன்றைய காலம்தொட்டு இருந்து வருவதாக இலக்கியங்களில் கூறப்பட்டு வருகிறது. அந்த இலக்கியங்கள் மூலம், ஆரம்பநாட்களில் இப்பகுதியை சென்னாபட்டிணம் என்றும் மீனவ அரசன் மதனேசன் இப்பகுதியை ஆண்டு வந்ததால் மதராசபட்டிணம் என்றும் அழைத்தனர் என்றும் தெரிகிறது.
ஆக இந்த சென்னை பட்டிணம் ஒரு காலத்தில் மிகப்பெரிய வியாபார தலமாக இருந்துள்ளது. சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளான, வெங்கடப்ப நாயக்கர், ஐயப்பநாயக்கர் ஆகியவரிடமிருந்து நிலங்களை ஆங்கிலேயர் கையகப்படுத்தி சென்னையானது விஸ்தரிப்பு செய்யப்பட்டது (விரிவுபடுத்தப்பட்டுள்ளது). அதனாலேயே சென்னப்ப நாயக்கரின் பெயராலேயே சென்னை என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வெங்கடப்ப நாயக்கர், ஐயப்பநாயக்கர் ஆகியவரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களைக்கொண்டு ஆங்கிலேயர்கள் இதில் ஒரு கோட்டை ஒன்றை கட்டி அதில் துணி வியாபாரம் செய்து வந்துள்ளனர். பின்னர், போர்த்துகீசிய தழுவலின் காரணமாக சென்னை மெட்ராஸாக மாறியது. ஆனால் மெட்ராஸ் என்ற பெயர் வருவதற்கு காரணம் மிகவும் குறைவாக நமக்கு தெரியவருகிறது” என்றார்.