செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் அம்பேத்கர் தெரு காலனி பகுதியை சேர்ந்தவர் டார்ஜென் (34). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துலுக்கானம் சம்பூரணம் தம்பதியினரின் மகள் ஜெயந்தி (31) ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்த அவர் போலீஸ் கெடுபிடி காரணமாக மது விற்பனையை கைவிட்டார். மதுவுக்கு அடிமையான டார்ஜென் கடந்த ஆண்டு குடிக்க பணம் கேட்டு கொடுக்க மறுத்த மனைவி ஜெயந்தியை தாக்கியிருக்கிறார். இதை மாமனார் துலுக்கானம் மற்றும் மாமியார் சம்பூரணம் ஆகியோர் தட்டி கேட்டதால் மாமியாரை தாக்கிவிட்டு மாமனாரை கட்டையால் அடித்தே கொன்றுள்ளார்.
இந்த வழக்கில் டார்ஜென் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த வாரம்தான் டார்ஜென் சிறையில் இருந்து வெளியில் வந்து வீட்டுக்கு வராமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு மீண்டும் ஜெயந்தியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தியின் தம்பி சைமன் என்கிற சூர்யா (25) மற்றும் டார்ஜெனின் சின்ன மாமனாரின் மகன் லோகேஷ்பாபு (28) ஆகியோர் மதுபோதையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த டார்ஜெனின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை வீட்டிலேயே போட்டுவிட்டு தலையை மட்டும் தனது தந்தை துலுக்கானத்தை கொலை செய்த இடத்தில் வைத்து விட்டனர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப்ரதீப் மற்றும் டிஎஸ்பி பாரத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த சூர்யா மற்றும் லோகேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.
பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் அக்காவின் கணவரை தலையை துண்டித்து தந்தையை கொன்ற அதே இடத்தில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.