ஓமலூர் அருகே அம்மா பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சி மையம் அமைத்து நான்கு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே சிதைந்து விட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்காவும், பூங்கா வளாகத்திலேயே நவீன உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக ஊஞ்சல், சறுக்கு, பொம்மைகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது.
இந்த பூங்கா வளாகத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராமப்புற இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அதிநவீன உடற்பயிற்சி கூடமும் கட்டப்பட்டது. ஆனால், பூங்கா கட்டி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், பூங்காவும், உடற்பயிற்சி கூடமும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே வைக்கப்படிருந்தது.
இந்த பூங்காவை ஒட்டி அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு மது வாங்குபவர்கள், பூட்டியுள்ள பூங்காவில் புகுந்து மது குடிக்க பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகள் விளையாட அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றையும் சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல் உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்து உடற்பயிற்சி கருவிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் 30 லட்சம் ரூபாய் நிதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலேயே முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளது. அதனால், பூங்கா அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றி பூங்காவையும், உடற்பயிற்சி கூடத்தையும் மீண்டும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.