சென்னையில் OLX இணையதளம் மூலமாக இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்பதாக விளம்பரம் செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
OLX இணையதளத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கார், பைக், செல்போன் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் இந்த இணைய பக்கத்தில் கிடைக்கும். ஆனால் இது அனைத்தும் ஏற்கெனவே ஒருவர் பயன்படுத்திய பொருள் என்பதால் குறைந்த விலைக்கு அதனை நம்மால் வாங்க முடியும்.
Second Hand ஆக பொருட்கள் வாங்க நினைப்பவர்கள், குறைந்த விலைக்கு பொருட்களை எதிர்பார்ப்பவர்கள் இந்த இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்நிலையில் OLX இணையதளத்தை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ராணுவ வீரர் என ஏமாற்றி சுமார் 100 கோடி ரூபாய் அளவில் OLX-ல் மோசடி நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில், OLX இணையதளம் மூலமாக இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்பதாக விளம்பரம் செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவல்லிக்கேணியில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஒரு வீடு, சில மாதங்களாக யாரும் வசிக்காமல் காலியாக இருந்து உள்ளது. இந்த வீடு 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளதாக OLX இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதையறிந்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில், கோயிலுக்குச் சொந்தமான அந்த வீட்டை விற்பதாக, சாதிக் பாட்சா என்பவர் விளம்பரம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்ய காவல்துறையினர் முனைந்து வருகின்றனர்.