சென்னை, தண்டையார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து காதணிகளை திருடிச்சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தண்டையார்பேட்டை நேதாஜிநகரில் வசித்து வருபவர் பாத்திமா. நேற்று மாலை இவரது வீட்டில் இருந்து வலியால் முனகும் சப்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, தலையில் பலத்த காயத்துடனும், காதுகளில் ரத்தத்துடனும் மூதாட்டி பாத்திமா வலியில் துடித்துக்கொண்டிருந்தார்.
பாத்திமாவின் காதுகளை வெட்டி காதணிகளையும், எளிதில் எடுக்கமுடியாமல் இருந்த மோதிரத்தை தோலை உரித்தும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் சிகரெட்டால் உடலில் தீக்காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். வாயில் துணி வைத்து அடைத்ததால் பாத்திமாவின் குரல் வெளியே கேட்காமல் போனது. காயங்களுடன் இருந்த மூதாட்டி மீட்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மொத்தம் பத்து சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கைரேகை நிபுணர்களும், தடயவியல் வல்லுநர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளனர். சம்பவம் பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.