சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு, மருமகளுடன் சேர்ந்து தன் மகன் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், மகனிடம் இருந்து தன் சொத்துக்களை மீட்டு தரக்கோரியும் தாயொருவர் கண்ணீர் மல்க தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி, ராமு அம்மாள் (84) என்ற மூதாட்டி. இவர், இன்று ஊன்றுகோல் உதவியுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனுவொன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், “நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்தேன். பின்னர் சொந்த ஊருக்கு வந்து கிடைக்கும் வேலையை செய்துவந்தேன். தற்போது வயது முதிர்வால் என்னால் முன்பு போல் வேலை பார்க்க முடியவில்லை. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் எனது மகன் என் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டதோடு, நான் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை எல்லாம் விற்றுவிட்டார். அவருக்கு நான் பங்களா வீடு கட்டிக் கொடுத்தேன். ஆனால், அவர் என்னை சரிவர கவனிப்பதில்லை. மகனுடன் சேர்ந்து மருமகளும் என்னை அடித்து துன்புறுத்துகின்றார். இதுபற்றி நீதிமன்றம் மூலம் நான் வழக்கு தொடர்ந்தேன். அதனால் இப்போதைக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் மட்டும் என் மகன் அனுப்புகிறார். ஆனால் இப்போது என் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாக கிடந்தேன். அப்போது என் மகள்தான் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து, கவனித்துக்கொள்கிறார்.
மகனோ சரிவர என்னை கவனிக்காமல் அடித்து துன்புறுத்துகிறார். வயதான காலத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. மனு கொடுப்பதற்காக தனியாக பஸ்ஸில் ஏறி வந்தேன். என் மகன் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்ட சொத்துக்களை மீட்டு என்னிடம் கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார். இச்சம்பவம் அங்கு இருந்தோரின் உலுக்கியது.