செய்தியாளர்: ரமேஷ்
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டுக்கு முன்பு வரை இந்து காட்டு நாயக்கர் (ST) பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக பல்வேறு காரணங்கள் கூறி மதுரை மாவட்ட நிர்வாகம் அந்த சாதி சான்றிதழை தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளி தேவைக்காக ஆன்லைனில் சாதி சான்றிதழுக்கு பதிவு செய்யும்பொழுதும், உரிய சாதி சான்றிதழை அதிகாரிகள் வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அம்மக்கள் புகார் தெரிவித்தபோது, “மதுரை மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்த மக்களின் பழக்கவழக்கங்கள் பழங்குடியினர் பின்பற்றும் வகையில் இல்லை என தெரியவந்துள்ளது. மெய்தன்மை சந்தேகத்துக்கு உரியதாக வாழ்வியல் மாற்றம் உள்ளது. அவர்களது பழக்கவழக்கங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் சாதியைப் போல உள்ள காரணத்தினால் இந்த சாதிக்கான சான்றிதழை அவர்களுக்கு வழங்க முடியவில்லை” என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ‘உரிய சாதி சான்றிதழ் வழங்காத மதுரை மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறோம்’ எனக்கூறி இன்றோடு சேர்த்து பத்தாவது நாளாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் இன்றைய போராட்டத்தில் தமிழக அரசுக்கும் மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்து அவர்கள் கோஷங்களை எழுப்பி வந்தனர். அப்போது சத்தியமூர்த்தி நகரை பாண்டியம்மாள் (60) என்ற மூதாட்டி கோஷம் எழுப்பியபடியே மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்த பிறர், ஆட்டோவில் அவரை சமயநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.