பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை சில சக்திகள், விஷமிகள் தூண்டிவிட்டுள்ளதாகப் பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நேரமில்லா நேரத்தின் போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், பேரவை விதிகளைச் சுட்டிக் காட்டி திமுகவின் கோரிக்கையைச் சபாநாயகர் தனபால் நிராகரித்துவிட்டார்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றுள்ளது. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களைக் கைது செய்ய முற்பட்ட போது, ஒத்துழைப்பு மறுத்துக் காவல் வாகனங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். காவலர்கள் மீது செருப்பு, கல் வீசப்பட்டது. காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் மீது கல் வீசி காயப்படுத்தியுள்ளனர். காவலர்கள் மீது பாட்டில், கல், செருப்பு வீசப்பட்டுள்ளது.
நோயின் காரணமாக ஒரு நபர் இறந்துள்ளார். ஆனால் அவர் காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இறந்தார் என்ற வதந்தியைப் பரப்பி, மாநிலம் முழுவதும் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளனர். கைது செய்ய முற்பட்டபோது ஒத்துழைப்பு மறுத்துள்ளனர். மாநில மத்திய அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
காவலர்கள் மீது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 82 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றதை அடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று எனது இல்லத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து மனு அளித்தனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சில சக்திகளும், விஷமிகளும் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பாக அரசு இருக்கும். இஸ்லாமியர்களுக்கு அரணாக அதிமுக அரசு இருக்கும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம்” என விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சரின் விளக்கத்தில் திருப்தியில்லை எனக் கூறியும், தீர்மானம் நிறைவேற்ற அரசு ஏற்கத் தயாராக இல்லாததால் அதனைக் கண்டித்தும் திமுக வெளிநடப்பு செய்தது. காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.