தென்காசியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை தட்டிக்கேட்ட முதியவருக்கு வேலை கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர் பணிப்பொறுப்பாளர்கள். இதுவரை கொடுத்த மனுக்களை மாலையாக திரட்டி அணிந்துகொண்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் முதியவர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் ராமநாதபுரம் ஊராட்சிப் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (80). தனது மகன்களால் கைவிடப்பட்ட நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைசெய்து அதில் வரக்கூடிய வருவாய் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்தில் தனக்கு வேலை இல்லை என அதிகாரிகள் புறக்கணித்துவிட்டதாகக் கூறும் அவர், அதுகுறித்து இதுவரை தான் கொடுத்த மனுக்கள் மற்றும் முதல்வரை சந்தித்து கொடுத்த மனு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனு ஆகியவற்றை மாலையாக கோர்த்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தார்.
இது குறித்து முதியவர் கூறுகையில், ’’நான் தனியாக உழைத்து வாழ்ந்துவரும் நிலையில் 100 நாள் வேலையில் நடைபெறும் முறைகேடுகளை சுட்டிக்காட்டுவது வழக்கம். இதனால் அதிகாரிகள், பணிப் பொறுப்பாளர்கள் எனக்கு வேலை இல்லை என்றும், உன்னால் முடிந்ததை பார்த்து கொள் என்றும், முதியவர் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசினர். மேலும் இதுகுறித்து பல மனுக்கள் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் வாழ்வாதாரமே 100 நாள் வேலை என்பதால் அதனை எனக்கு முறையாக வழங்க வேண்டும். மேலும் வேலையில் பணிபுரிய லஞ்சம் கேட்கும் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி மற்றும் அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து மனுக்களை பெறும் தென்காசி மாவட்ட ஆட்சியர் சாதாரண பொதுமக்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து மனுக்களை பெறுவது இல்லை எனவும் கூறியுள்ளார். காலை 9 மணி அளவில் மனுக்கொடுக்க வந்த முதியவர் நண்பகல் 2 மணி வரை காத்திருந்தும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாமல் காத்திருந்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.