தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று வழக்கம்போல் பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
அதில் கூடுதல் மகளிர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக தேனி அருகே உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்த வீமன்ராஜ் (63) என்ற முதியவர் வந்துள்ளார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன் பக்கத்து வீட்டுப் பெண்ணை தாக்கியதாக வழக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்தவர், நீதிமன்ற விசாரணை அரங்கிற்கு முன்பாக உள்ள வளாகத்தில் செல்போனில் சத்தமாகத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த நீதிமன்ற அலுவலக உதவியாளர் குப்புசாமி என்பவர், "நீதிமன்ற விசாரணை நடைபெறும்போது சத்தமாகப் பேசாதீர்கள்" எனக் கூறியுள்ளார். ஆனால் மீண்டும் வீமன்ராஜ் செல்போனில் சத்தமாகப் பேசியுள்ளார். அப்போது நீதிமன்ற அலுவலக உதவியாளர் முதியவரைக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முதியவர் நீதிமன்ற அலுவலக உதவியாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், "என்னைப் பேசாமல் இருக்கச் சொல்ல நீ யார்? என்று கேட்டது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தை விட்டு நீ வெளியே வா... உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என நீதிமன்ற வளாகத்திலேயே கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற அலுவலக உதவியாளர் குப்புசாமி, பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வீமன்ராஜ் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை அலுவலகப் பணி செய்யவிடாமல் தடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.