ஓசூரில் யானை தூக்கி வீசியதில் மூதாட்டி படுகாயம் அடைந்த நிலையில், யானை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் சானமாவு பகுதியில் ஒற்றை காட்டுயானை அவ்வப்போது வட்டமிட்டு வருகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் இந்த ஒற்றை யானை, அருகில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதாக அப்பகுதியினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த யானை பகல் நேரங்களில் வலம் வருவதால் மக்கள் அச்சமடைந்திருந்தனர். இதனால் வனத்துறையினர் தொடர்ந்து ஒற்றை யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் காவேரி நகர் கிராமத்தின் கல்குவாரி பகுதியில் நேற்றிரவு புகுந்த யானை, இன்று காலை விடிந்த பிறகும் காட்டிற்குள் செல்லாமல் இருந்துள்ளது.
யானை இருப்பதை அறியாத மூதாட்டி துளசியம்மா (65), கல்குவாரி அருகே உள்ள தனக்கு சொந்தமான விளை நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென யானை மூதாட்டியை தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. யானை தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த துளசியம்மா ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், யானை தாக்கி மூதாட்டி படுகாயமடைத்திருக்கும் சம்பவத்தால், சானமாவு வனப்பகுதியை ஒட்டிய ஆழியாளம், போடூர், கோப்பச்சந்திரம், இராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.