வேலூரில் மூன்று ஆண்டுகள் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய மூதாட்டி, பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரி (70). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே மத்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது, ஆதரவில்லாத தனக்கு பணமதிப்பிழப்பு குறித்து யாரும் கூறவில்லை என்கிறார் மூதாட்டி. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வீடு திரும்பிய நிலையில், பழைய நோட்டுகளை தான் குடியேறிய வீட்டிற்கு வாடகையாக மூதாட்டி கொடுத்திருக்கிறார்.
ஆனால் வீட்டின் உரிமையாளர் இந்த நோட்டுகள் செல்லாது என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செய்வதறியாது தவித்துள்ளார். அத்துடன் கையில் இருக்கும் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பலரிடம் உதவிகேட்டுள்ளார். இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி, தனது பணத்தை மாற்றி கொடுக்க உதவி செய்யுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பினர். தனிமையில் இருக்கும் தனக்கு உதவ யாரும் இல்லை என்றும், வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் தவிப்பதாகவும் மூதாட்டி கண்ணீர் மல்க கூறுவது காண்போரை கலங்கச் செய்தது. தனக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.