ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சாலையில் விழுந்து தரையில் தேய்த்துக்கொண்டு சென்ற வீடியோ காட்சி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (55). இவர் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்வதற்காக சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப்பேருந்தில் பயணம் செய்தார். சர்வீஸ் சாலையில் வேகமாக பேருந்து திருப்பியபோது, உள்ளே நின்றுகொண்டிருந்த கோகிலா தூக்கி வீசப்பட்டார்.
சுமார் 100 அடி தார்சாலையில் தேய்த்துக்கொண்டு சென்ற அவர் அருகிலிருந்த சாக்கடையில் விழுந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் பார்ப்பவரை அச்சம் கொள்ளச் செய்கிறது. பலத்த காயமடைந்த கோகிலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், சர்வீஸ் சாலையில்தான் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் வேகமாக திரும்புவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.