நாமக்கல் அருகே அசுர வேகத்தில் சென்ற பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண், பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். தான் படியின் அருகில் நிற்கவில்லை என வெள்ளந்தியாக கூறுகிறார் அந்த பெண்மணி.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கோகிலா. 55 வயதான இவர், சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்தார். பேருந்தின் இருக்கையில் இடம் இல்லாததால், நின்றபடியே அவர் பயணித்துள்ளார். அதிவேகமாக சென்றதாக கூறப்படும் அரசு பேருந்து, கத்தேரி பைபாஸ் சாலையின் வளைவில் திரும்பியபோது பேருந்திலிருந்து தவறி வெளியே விழுந்த கோகிலா சாலையோர கழிவுநீர் கால்வாயில் விழுந்தார்.
அப்பகுதியிலிருந்தவர்கள் கோகிலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, உடல் முழுவதும் காயத்துடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கோகிலா சிகிச்சை பெற்று வருகிறார். தான் படியில் நிற்காதபோது எப்படி விழுந்தேன் என தனக்கே தெரியவில்லை என கோகிலா கூறுகிறார். மேலும் படி அருகே நின்றால் நடத்துநர் திட்டுவார் எனவும் பேருந்துக்குள் தான் நின்றிருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.