ரேஷன் கடையில் கைரேகை பதிவிற்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் மீண்டும் மீண்டும் வரச்சொல்லி அலைக்கழிக்கும் இசேவை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் என்பது வயது முதியவர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள் (80) மற்றும் அவருடைய மனைவி தானம்மாள்(75). தற்போது தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொருள் வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைக்கவேண்டும் என்று அறிவித்திருக்கும் நிலையில், கலியபெருமாளும், அவரது மனைவி தானம்மாளும் கைரேகை பதிவு செய்துள்ளனர். வயது ஆகியதால் கைரேகையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ரேஷன் கடைக்கார ஊழியர் தெரிவித்ததோடு மீண்டும் இ-சேவை மையத்திற்கு சென்று கைரேகை புதுப்பித்து வருமாறு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து கைரேகை பதிவு செய்ய வந்துள்ளனர் இந்த வயதான தம்பதியினர்.
ஆனால், இ-சேவை மையம் தொடர்ந்து அவர்களை அலைக்கழித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்று இ-சேவை மையத்திற்கு வருகை தந்தபோது அடுத்த மாதம் ஆறாம் தேதி வருமாறு அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே தாங்கள் அரிசி வாங்கமுடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த மாதமும் அரிசிகூட வாங்கமுடியாத நிலை இருப்பதாக கலங்கிபோய், யாரிடம் முறையிடுவது என்றுகூட தெரியாமல் சொந்த ஊருக்கு திரும்பினர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு புதிய கைரேகை பதிவு செய்துதர வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக இருக்கிறது. மேலும், பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் இ-சேவை மைய ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது இயந்திரம் பழுதாகி உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
- ஜோதி நரசிம்மன்