கள்ளக்குறிச்சி மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடம். வாளி, பாட்டில்களில் எண்ணெய்யை ஊர் மக்கள் அள்ளிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பரிக்கல் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கோவை நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, ஓட்டுநரின் கவனக்குறைவால் தடுப்பு மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த சமையல் எண்ணெய் வெளியேற தொடங்கின.
இதனை அறிந்த கிராம மக்கள் குடங்கள் மற்றும் வாளி, பாட்டில்கள் ஆகியவற்றின் மூலமாக அங்கிருந்து எண்ணெய்யை அள்ளிச் சென்றனர். உடனடியாக திருநாவலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் லாரி ஓட்டுநர் சரவணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.