திருச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கி வந்த மசாஜ் சென்டரை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆனாலும் நோய் தொற்று கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அத்தியாவசிய கடைகளான மளிகைக்கடை, காய்கறி கடை, கறிக்கடை, பெட்ரோல் பங்கு ஆகியவை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை அவைகள் இயங்குவதற்கான நேரம் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை என நிர்ணயிக்கப்பட்டுள்ள்து. இவை தவிர ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், திருச்சி, உறையூரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் திடீரென அந்த குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி, உரிமம் இல்லாமல் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையின்போதே பணியிலிருந்த 2 பெண்களும் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த மசாஜ் செண்டரை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.