மழையால் சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரத்தை மீட்டு மிக அழகாக அரசு அதிகாரிகள் நட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் ஏரிக்கரையில் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அண்மையில் பெய்த கனமழையால் இந்த ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. கரையில் அதிகப்படியான ஈரம் மற்றும் காற்று காரணமாக இந்த மரம் ஏரியின் உட்பகுதியை நோக்கி சாய்ந்தது.
இது குறித்து தகவலறிந்து செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தகவலறிந்த அரியலூர் ஆட்சியர் ரத்னா ஏரிக்கரையில் சாய்ந்த ஆலமரத்தை அதே இடத்தில் இயந்திரங்கள் உதவியுடன் மீண்டும் நட்டு வைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் செந்தில் தம்பி மேற்பார்வையில் சாலை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து விட்டு அந்த மரத்தினை அதே இடத்தில் நட்டு வைத்தனர். நெடுஞ்சாலை துறையினரின் இந்தப் புதிய முயற்சி அரியலூர் மாவட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.