சென்னை தாம்பரம் அடுத்த ஜி.எஸ்.டி சாலையில் குரோம்பேட்டை, சானடோரியம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளின் இரு புறங்களிலும் தள்ளுவண்டி கடைகள், பெட்டிக் கடைகள் வைத்து சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக நெடுஞ்சாலை துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. அதன் காரணமாக கடந்த 20ம் தேதி ஜி.எஸ்.டி சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறையினர் கடைக்காரர்களிடம் கூறியுள்ளனர்.
அப்போது ஒரு சிலர் கடைகளை அப்புறபடுத்தாமலும், சிலர் அந்த நேரத்தில் எடுத்து விட்டு சிறிது நேரத்தில் மீண்டும் கடையை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த தள்ளுவண்டி கடையின் மேற்கூரையை உடைத்தனர்.
அதேபோல் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் இருந்த பெட்டிக் கடையையும் இடித்து அகற்றினர். இதில் கடையில் இருந்த பொருட்கள் சேதமாயின. அப்போது அக்கடையின் பெண் கதறி அழுதது, காண்போரையும் வேதனைக்குள்ளாக்கியது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை உதவி செயற் பொறியாளரிடம் நாம் கேட்டபோது, “இரண்டு முறைக்கு மேல் கூறியும் தள்ளுவண்டியை கடையை எடுப்பது போல் எடுத்துவிட்டு, மீண்டும் அங்கேயே வைத்துவிட்டனர் சிலர். அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என தெரிவித்தார்.