நல்லம்பள்ளி பிடிஓ அலுவலகத்தில் ரூ.1500 லஞ்சம் பெற்ற பணி மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(38). இவர் தனது தந்தை முனியப்பன் பெயரில் உள்ள நிலத்தில், பாரதப் பிரதமரின் குடியிருப்புத் திட்டம் மூலம் நிதி பெற்று வீடு கட்டியுள்ளார்.
இந்த வீட்டுக்கான நிதி ரூ.1.70,000-ல், ரூ.1,36,300-ஐ 4 தவணைகளாக பெற்றுள்ளார். இதில் வீட்டின் முழுப் பணியினையும் முடித்து விட்டு மீதமுள்ள இறுதி தொகையான ரூ.33,700-ஐ வழங்க நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அங்கு பொறியியல் பிரிவில் பணியாற்றும் பணி மேற்பார்வையாளர் ஜி.அப்பாவு(47), பயனாளி பச்சையப்பனிடம், கடந்த 4 தொகைக்கே பணம் தராமல் சென்றுவிட்டாய், இதற்கு ரூ.2000 லஞ்சம் கொடுத்தால் தான் தொகை கொடுப்பேன் என கூறி கால தாமதம் செய்துள்ளார். இதனையடுத்து ரூ.1500 கொடுப்பதாக் பச்சையப்பன் தெரிவித்துள்ளார். இதனை பெற்றுக் கொள்ள அப்பாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து லஞ்சம் வழங்க விரும்பாத பச்சையப்பன் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை அணுகியுள்ளார். அவர்களின் வழிகாட்டுதல்படி நேற்று மாலை, ரசாயனம் தடவப்பட்ட ரூ.1500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அப்பாவுவிடம் வழங்கியுள்ளார். அப்போது, மறைந்திருந்த தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி சுப்பிரமணி, ஆய்வாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அப்பாவுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.