ஒகி புயலால் இனி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், புயல் தீவிரமடைந்து லட்சத்தீவை நோக்கி மணிக்கு 230 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. ஒகி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இரு புறமும் உள்ள ஏராளமான மரங்கள் வேரொடு பெயர்ந்தன. சாலைகளில் பெயர்ந்து விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான ஒகி புயல் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒகி புயல் தீவிரமடைந்து லட்சத்தீவை நோக்கி நகரும் என்றும் புயலால் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரியை அச்சுறுத்துக் கொண்டிருந்த ஒகி புயல் திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ளது.