கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தென் தமிழகத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் தென் தமிழக பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடல் பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி கடலில் காற்று 40-முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்தமான் பகுதியில் அடுத்த 48-மணி நேரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்திருந்தது. இந்நிலையில் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் நேற்றிரவு காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடல் தொடர்ந்து சீற்றமாகவே காணப்படுகிறது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வல்லங்கள் கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.