“செப்.11-ல் பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வரலாற்றுப்பிழை”- முனைவர் சுப்புரெத்தினம்

“செப்.11-ல் பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வரலாற்றுப்பிழை”- முனைவர் சுப்புரெத்தினம்
“செப்.11-ல் பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வரலாற்றுப்பிழை”- முனைவர் சுப்புரெத்தினம்
Published on
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11-ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12-ம் தேதி அனுசரிக்கப்பட வேண்டும் என பாரதியின் இறப்பு ஆவணங்களுடன் கடந்த கால் நூற்றாண்டுகளாக போராடி வரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர் முனைவர் சுப்புரெத்தினம். பாரதியின் நூற்றாண்டு விழாவின் போதாவது இந்த வரலாற்றுப் பிழை திருத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கிறார் அவர்.
“மகாகவி பாரதியாரின் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும்” என மயிலாடுதுறை சேர்ந்த தமிழ் பேராசிரியர் கால் நுற்றாண்டு காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்.
தனது இறுதி காலத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாரதியார் தனது 39-ஆவது வயதில் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் இறந்துள்ளார். அதனால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பது அடுத்த நாள் கணக்கில் தான் வரும் என்பதால் செப்டம்பர் 12-ஆம் தேதி பாரதியார் இறந்ததாக குறிப்பிட்டு அவரது உறவினர்கள் அவரது இறப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சுவழக்கிலும் பாரதியார் செப்டம்பர் 11-ஆம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்து விட்டது. ஆனால் சென்னை மாநகராட்சியில் உள்ள பதிவேடு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரதியார் இறந்ததாக குறிப்பிடுகிறது.
இதுகுறித்து பாரதி வாழ்க்கை பற்றிய ஆய்வு செய்யும் ஆய்வாளரும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான முனைவர் சுப்புரத்தினம், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 12 என அதிகாரபூர்வமான தேதியை மாற்ற வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவரது முயற்சியின் பயனாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு இல்ல மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டில் பாரதியார் இறந்தநாள் செப்டம்பர் 12 என 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசின் அரசிதழிலும், அதிகாரபூர்வ அறிவிப்பு செப்டம்பர் 12 என அறிவிக்கப்படாததால் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளால் செப்டம்பர் 11ஆம் தேதியே பாரதியாரின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் நாள்காட்டிகளிலும், பாடக்குறிப்புகளிலும் இது மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்று முதல்வர் மகாகவி நாள் குறித்து தெரிவிக்கையில், செப்டம்பர் 11-ம் தேதியையே பாரதியின் நினைவு தினமாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, “இந்த நாள், மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இந்த முரண்பாடு அதிகாரபூர்வமாக களையப்பட வேண்டும்” எனக்கூறி, அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com