விதிமுறைகளை மத்திய அரசு எளிமையாக்கியதால்தான் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ் மணியன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் இரண்டு குழுக்களை அமைத்துள்ளார். அந்த குழுவின் பரிந்துரைகள் படி முடிவு எடுக்கப்படும். கிசான் கார்டு பொருத்தவரை விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள், கால்நடை வைத்திருப்போர், மீனவர்கள் என பல விதமான கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. கிசான் கார்டு பயனாளிகளுக்கு மூன்று தவணைகளாக தலா 2000 வீதம் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. இது முதலில் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக தாசில்தார் சான்றிதழ் பெற்ற பிறகு கொடுக்கப்பட்டு வந்தது. வேளாண் துறையில் விரிவாக்க பணியாளர்கள் சான்று பெற்று துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குனர் மூலமாக ஒப்புதல் பெறப்பட்டு சான்று வழங்கப்பட்டு அதன் பின்னர் பணம் வழங்கப்பட்டது. இதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மத்திய அரசு , யார் பயனாளிகளோ, அவர்களே அப்டேட் செய்யலாம் என்று விதிமுறையை எளிமையாக்கியது. இதனால்தான் இந்தப் பிரச்சனை எழுந்திருக்கிறது. எளிதாக்கிய காரணத்தால் பாஸ்வேர்டு அதிக பேருக்கு தெரிந்ததால் அதனை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இது சரிசெய்யக்கூடிய ஒன்று தான். மத்திய அரசின் வழிகாட்டுதலோடு இது நடைபெற்றிருப்பதால் இதனை கவனத்தில் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன ? என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு "வரட்டும் பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.