மீண்டும் தர்மம் வெல்ல கால அவகாசம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் மீண்டும் தர்மம் வெல்ல கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் அனைவரும் தொகுதி மக்களை சந்தித்த பின் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளை தாங்கள் சபாநாயகரிடம் வைத்ததாகவும் ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ-க்களை ஜனநாயக மரபுக்கு விரோதமாக வெளியேற்றி, தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானத்தை மக்களின் கருத்துக்கே விடுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா அணியான தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என தெரிவித்த பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.