கடந்த ஐந்து வருடங்களாக ஆன்லைன் புத்தக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், குறைவான சலுகை விலையில், நிறைவான புத்தகங்கள் சென்னை புத்தக காட்சியில் இடம் பெற்றுள்ளது. தமிழ் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனை துறையை இந்த புத்தக கண்காட்சி மீட்டுருவாக்கம் செய்யும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 25 நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும் புத்தகங்களின் தலைப்புகள், அரங்கங்களின் அமைப்புகள் போன்றவற்றில் சென்னை புத்தக கண்காட்சியே வாசகர்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்பார்த்த அளவு புத்தக விற்பனை நடைபெறாமல் இருந்தது. புத்தகம் அச்சிடும் தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினர் பொருளாதார அடிப்படையில் பாதிப்பை சந்தித்தனர்.
இந்நிலையில் இந்த வருடம் புத்தக கண்காட்சியில் 800 அரங்கங்களில், 500க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் புத்தக விற்பனை அங்காடிகளை வைத்துள்ளனர். 2000க்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. கடந்த வருடம் புத்தக கண்காட்சியில் 10 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில் இந்த வருடம் 2 லட்சம் பேர் ஆன் லைன் மூலம் இப்போதே பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கொரோனா விதிகளை மட்டும் பின்பற்றி அனைத்து வாசகர்கள் அனுமதிக்க படுவார்கள் என கூறப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாசகர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என பபாசி தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக ஆன்லைனில் புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புத்தகக் கண்காட்சியில் சலுகை விலை 10 சதவீதத்தோடு, புத்தகங்களின் எண்ணிக்கையை பொருத்தும் பதிப்பாளர்கள் கழிவு விலையை விட குறைத்துக் கொடுக்கின்றனர். மொத்தமாக புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் வாசகர்களுக்கு அந்தந்த பதிப்பாளர்கள் தனி சலுகைகளும் வழங்குகின்றனர்.
கடந்த வருடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாக பபாசி தெரிவித்துள்ளது. இந்த வருடம் வெளியூர்களில் இருந்து வரும் வாசகர்களின் எண்ணிக்கையும், பள்ளி கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையும் புத்தக கண்காட்சியை திருவிழாவாக மாற்றும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 10% முதல் 40% தள்ளுபடி வரை ஆன்லைன் விலையை விட புத்தகங்கள் விலை குறைவாக இருப்பதும் பெரும் பலனை தரும் என பாபசி கூறியுள்ளது.