செய்தியாளர்: ஜெ.ஜெயசீலன்
நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருவையாறில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்... ”திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களை பார்த்தால் மன்னிப்பு கேட்பவர்கள் போல தெரிகிறதா? செல்போன் ஆடியோவை வெளியிட்ட அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் வழக்கம் இருக்கிறது. அங்கெல்லாம் அம்மாநில மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழக மீனவர்கள் மட்டும் சிறைபிடிக்கப்படுகின்றனர். அனைவரும் ஒரே நாட்டு மீனவர்களாக உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மட்டும் சிறைபிடிக்கப்படுவது என்ன நியாயம்? மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கொள்கைகளை கடைபிடிக்கும் மத்திய அரசு தமிழக மீனவர்களை பாகுபாட்டுடன் பார்க்கிறது.
மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை என தமிழக அரசு கூறுகிறது. மத்திய அரசிடம் கொஞ்சிக் குலாவும் தமிழக அரசு, நிதியைக் கேட்டு வாங்க முடியாதா? எதற்காக 40 எம்பிகள் உள்ளனர். மத்திய அரசு நிதி தரவில்லை என அடிக்கடி கூறும் தமிழக அரசு, தண்ணீரை கேட்டுப் பெறுவதற்கு அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த போதுதான் காவிரி, முல்லைப் பெரியாறு, கட்சத்தீவு, கல்வி, மருத்துவம் மின் உற்பத்தி உள்ளிட்டவை எல்லாம் பறிபோய் விட்டது.
முன்னேறிய வகுப்பினர் முன்னேற்றம் அடைந்த பிறகு அவர்களுக்கு எதற்காக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். படிக்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது போன்ற கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்குதான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இரு தரப்பினரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.
மதுபானம், சாராயம், கஞ்சா போன்றவற்றால்தான் பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை நாடு முழுவதும் அதிகமாக உள்ளது. இதனால் கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, பட்டுக்கோட்டை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே, நாடு முழுவதும் போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்தால்தான் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்” என்று சீமான் தெரிவித்தார்.