“கேஜிஎஃப் படத்த நான் தடுத்து நிறுத்த எவ்ளோ நேரம் ஆகும்; ஒரு அறிக்கைதான்” - கொந்தளித்த சீமான்!

“சித்தார்த் ஒரு கலைஞர். அவருக்கும் தண்ணீர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை. காவிரியில் தண்ணீர் கொடுங்கள் என கேட்கவும் இல்லை” - சீமான்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா தர மறுப்பதால் தமிழ்நாடு அரசு தொடர் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைக்கு கர்நாடகா, தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீர் திறந்து விடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கன்னட மக்களும், சில அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

நடிகர் சித்தார்த் தனது சித்தா திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாடிக்கொண்டிருந்த போது அங்கு நுழைந்த கன்னட அமைப்பினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சித்தார்த் அந்த அரங்கில் இருந்து வெளியேறினார்.

கன்னட அமைப்பினரின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கன்னட நடிகர் சிவராஜ் குமார் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சித்தார்த்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நடிகர் சுதீப் நடித்துள்ளார். யாஷ் நடித்து கேஜிஎஃப் படம் இரண்டு பாகமாக வந்துள்ளது. அவர்களுக்கு நாம் எந்த இடையூறும் செய்வதில்லை. ஆனால் அவர்கள் நம் நடிகர்களின் படங்களை திரையிடவிடுவதில்லை. சித்தார்த் ஒரு கலைஞர். அவருக்கும் தண்ணீர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை. காவிரியில் தண்ணீர் கொடுங்கள் என கேட்கவும் இல்லை” என்றார். அவரது செய்தியாளர் சந்திப்பின் முழு காணொளியும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com