முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தி மற்றும் 62ஆவது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஸ், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோரும் வந்திருந்து முத்துராமலிங்க தேவருக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் வந்த சீமான் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்த போது, குருபூஜை விழாவிற்காக வந்திருந்த இளைஞர்கள் சீமானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் ஓட்டுக்காகவும் அரசியலுக்காவும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கருத்தை கூறுவதாகவும் , ஏற்கனவே பரமக்குடியில் நடந்த ஒரு சமூக தலைவரின் நிகழ்வில் பாண்டிய வம்சம் குறித்து ஒரு சர்ச்சை கருத்தை கூறியதாவும், தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பாண்டியர்கள் எனவும் முழக்கங்களை எழுப்பிய இளைஞர்கள் அப்போது கூறினர்.