பிளாஸ்டிக்கால் செய்யப்படும் மாதவிடாய்க்கால நாப்கின்கள், பெண்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால்; புளித்த கீரையின் தண்டில் இருந்து நாப்கின்களை செய்து கோவையைச் சேர்ந்த ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.
ஒரு பெண் சராசரியாக, தன் வாழ்நாள் முழுக்க 15,000 சானிடரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு தரவு. இப்படி பொதுவாக பயன்படுத்தப்படும் நாப்கின்களில் 80 சதவீதம் பிளாஸ்டிக் இருக்கும். இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மட்க, 700 முதல் 900 ஆண்டுகள் வரை ஆகிறது என்கின்றன ஆய்வுகள்.
இப்படி பிளாஸ்டிக்கும் ரசாயனங்களும் கலந்து உருவான நாப்கின்களால் பெண்களுக்கு புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உடலுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை விடுவிக்க, புளித்த கீரை தண்டில் நாப்கின்கள் தயாரித்து அசத்தியிருக்கின்றனர் கோவையை சேர்ந்த இரு மாணவர்கள்.
ஃபேஷன் டெக்னாலஜி மாணவ மாணவியர்களான நிவேதா, கௌதம் ஆகியோர் ஒரு ஆய்விற்காக புளித்த கீரையை விவசாயம் செய்பவர்களை சந்தித்துள்ளனர். அப்போது கீரையின் இலைகள் உணவிற்கு பயன்பட்டாலும், அதன் தண்டுகள் வீணாகிப் போவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால், எந்த நாரில் என்ன உடைகளை நெய்யலாம் என்று உடனடியாக தங்களுக்குள் ஒரு கணக்கு போட்டு, அது போலவே அந்த தண்டில் இருந்து நாரை எடுத்து அதை துணியாக்கி ஆடைகளாக வடிவமைத்தனர்.
முதலில் புளிச்ச கீரை தண்டில் இருந்து ஆடைகள் தயாரித்த பிறகு அந்த துணிகளில் நல்ல உறிஞ்சும் சக்தியும், நுண்ணுயிரைக் கொல்லக்கூடிய திறன் இருப்பதும் தெரியவந்தது. அப்போதுதான், சானிட்டரி நாப்கின்களாக தயாரித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த இயற்கை நாப்கின்கள் 4 மாதத்தில் முழுமையாக மட்கக்கூடியது.
புளித்த கீரைச் செடிகள் இயற்கையாகவே மாசை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. இவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு பல பெண்களை காக்கும் தன்மையும் கொண்டது என்பதால், இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த கண்டுபிடிப்புக்காக இவர்கள் சுயசக்தி விருது, சத்ர விஸ்வகர்மா விருது என பல விருதுகளை பெற்றுள்ளனர்.